நாமக்கல்லில் பெயிண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். பெயிண்டர் கொலை நாமக்கல் மாரிகங்காணி தெருவை சேர்ந்தவர் பெயிண்டர் ரமேஷ் (வயது 31). இவர் எஸ்.பி.கே. நகருக்கு செல்லும் காட்டுப்பகுதியில் தலையில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து நல்லிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீசார் நடத்திய விசாரணையில், ரமேஷ் கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ரமேசுக்கு அதே பகுதியில் வசித்து வந்த லட்சுமணன் என்பவரின் மனைவியுடன் தொடர்பு இருந்து வந்தது. இதை அறிந்த லட்சுமணன் ரமேஷை கண்டித்துள்ளார். ஆனால் ரமேஷ், லட்சுமணனின் மனைவியுடனான தொடர்பை கைவிடாததால் ஆத்திரம் அடைந்த லட்சுமணன், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்ய திட்டம் போட்டதாக கூறப்படுகிறது. 4 பேர் கைது அதன்படி சம்பவத்தன்று இரவு லட்சுமணனின் நண்பர் ஒருவர் ரமேசிடம் எஸ்.பி.கே. நகரில் ஒரு ஆட்டோவுக்கு பெயிண்ட் அடிக்க வேண்டும் என கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்போது வழியில் ஒரு மரத்தின் அடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லட்சுமணன் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து இரும்பு கம்பியால் ரமேசை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நாமக்கல் அருகே கொண்டிசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி லட்சுமணன் (26) மற்றும் அவரது நண்பர்கள் மோகனூர் அருகே உள்ள பாலப்பட்டி பகுதியை சேர்ந்த புலி என்ற ஸ்ரீதர் (23), பிரபாகரன் (20) மற்றும் 17 வயது நிரம்பிய ஒருவர் ஆகிய 4 பேர் நாமக்கல் டவுன் பகுதியில் இருப்பதை அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர் களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
news source dailythanthi
No comments:
Post a Comment