snapdeal

Thursday, January 12, 2017

மாணவர்களுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மிகப்பெரிய போராட்டமாக வெடிக்கும் என்று எச்சரிக்கை

  


சென்னை,


தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் சமத்துவ பொங்கல் விழாவில் நேற்று பங்கேற்றார். பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:–ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருக்கிறதே?

பதில்:–உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்திருக்கின்ற காரணத்தால், இப்போதாவது மத்திய அரசு உடனடியாக ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் ஆர்வலர்களின் சார்பில் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன்.

பொங்கல் வரப்போகிறது என்று நன்றாக தெரிந்திருந்தும், மாநில அரசு முன் கூட்டியே நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான், இன்றைக்கு கடைசி நிமிடத்தில் உச்ச நீதிமன்றம் மறுத்திருக்கின்றது. இன்னும் இரண்டு நாட்கள் தான் இடையில் இருக்கிறது. எனவே உடனடியாக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். மத்திய அரசு உடனே அவசரச்சட்டத்தை கொண்டு வர வேண்டும். தமிழக இளைஞர்கள் கிளர்ந்தெழக்கூடிய ஒரு போராட்டச் சூழ்நிலையை சந்திக்க வேண்டிய நிலை மத்திய, மாநில அரசுகளுக்கு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வேதனைப்படுகிறேன் 

கேள்வி:–தமிழக முதல்–அமைச்சரும், ஆந்திர முதல்–மந்திரியும் குடிநீர் பிரச்சினை குறித்து சந்திக்க இருக்கிறார்கள். இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:–இந்த சந்திப்பை நான் வரவேற்கிறேன். இதேபோல ஜல்லிக்கட்டு வி‌ஷயத்திலும் ஏற்கனவே பிரதமரை, தமிழக முதல்–அமைச்சர் நேரடியாக சந்தித்து உடனடியாக ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதை செய்யவில்லை என்ற நிலைதான் இன்றைக்கு இருக்கின்றது. உள்ளபடியே அதற்கு வேதனைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

மாணவர்களுக்கு பாராட்டு 

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி போராட்டம் நடத்தி வரும் புது கல்லூரி மாணவர்களை மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பாராட்டு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களை பேரணியாக, சாலை மறியலாக, ஆர்ப்பாட்டங்களாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆக, மாணவர்கள் கிளர்ந்தெழுந்திருக்கக்கூடிய இந்தக் காட்சிகளை பார்க்கின்றபோது, எனக்கு நினைவுக்கு வருவது, நமது தமிழ்மொழிக்கு ஆபத்து ஏற்பட்ட நேரத்தில், 1965–ம் ஆண்டும் நம்முடைய மொழியை காப்பாற்றுவதற்காக ஒரு மிகப்பெரிய போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று, அந்தப் போராட்டம் எந்தளவிற்கு வெற்றி பெற்றது என்பது வரலாற்றில் தெளிவாகப் பதிவாகி இருக்கின்றது.

வெடிக்கும் 

இந்த நேரத்தில் மத்திய, மாநில அரசுகளை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, வலியுறுத்த விரும்புவது, உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியை அணுகி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேநேரத்தில் தனியாக ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆக, இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால், மாணவர்களுடைய போராட்டம், மிகப்பெரிய போராட்டமாக வெடிக்கும். அப்படி மாணவர்களின் போராட்டம் வெடிக்கும் என்று சொன்னால், நிச்சயமாக நான் கூறுகிறேன், இன்றைக்கு மத்தியில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும், மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாக இருந்தாலும், அவர்களுடைய வீழ்ச்சியாகத்தான் இது அமைந்திட முடியும் என்று எச்சரிக்க கடமைப்பட்டு இருக்கின்றேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

FREE DOWNLOAD