snapdeal

Tuesday, December 27, 2016

நான் இன்னும் தலைமைச் செயலாளராக நீடிக்கிறேன்’ ராமமோகன ராவ் பரபரப்பு பேட்டி


சென்னை, 


வருமான வரி சோதனை

ராமமோகன ராவ், அவரது மகன் விவேக் மற்றும் அவருடைய நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த 21-ந்தேதி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையின்போது கணக் கில் காட்டப்படாத ஏராளமான பணம், பல கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இது தொடர்பாக ராமமோகன ராவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் அவர் திடீரென்று நெஞ்சுவலிப்பதாக கூறியதால், கடந்த 24-ந்தேதி அதிகாலை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். முதலில் தீவிர சிகிச்சை பிரிவிலும், பிறகு சாதாரண வார்டிலும் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு

இந்த நிலையில், சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் ராமமோகன ராவ், நேற்று காலை 10.30 மணிக்கு நிருபர்களை சந்திப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது வீட்டில் நிருபர்கள் குவிந்தனர்.

2 அடுக்குமாடிகளை கொண்ட அந்த வீட்டின் தரைத்தளத்தில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த, சிறிய அளவிலான தற்காலிக மேடையில் நின்றபடி ராமமோகன ராவ் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.

தலைவர்களுக்கு நன்றி

அப்போது அவர் கூறியதாவது:-

எப்போதும் அமைதியை விரும்பும் நான், என் வீட்டில் நடந்த வருமானவரித் துறையினரின் சோதனை குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், என்னுடைய விளக்கத்தை அளிப்பதற்கும் இந்த கூட்டத்தை கூட்டி உள்ளேன்.

என்வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியபோது, நான் ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளர் என்ற முறையில், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அ.தி.மு.க. எம்.பி., எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், அ.தி.மு.க. செய்திதொடர்பாளர் தீரன் ஆகியோர் இதைக் கண்டித்தனர். அவர்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீட்டுக்காவல்

வருமானவரித் துறையினர் என் வீட்டுக்கு கடந்த 21-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு வந்தனர். அப்போது என் வீட்டில் நான், என் மனைவி, மகள் மற்றும் பேத்தி ஆகியோர் இருந்தோம்.

வருமான வரித்துறையினருடன் துப்பாக்கி ஏந்திய துணைராணுவத்தினர் பாதுகாப்புக்கு வந்தனர். என்னை அவர்கள் 26 மணி நேரம் வீட்டு காவலில் வைத்தனர். தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். இது சட்டத்திற்கு புறம்பான, முறையற்ற செயலாகும்.

‘சர்ச்’ வாரண்டில் பெயர் இல்லை

அத்துடன் சோதனை நடத்த வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் காண்பித்த ‘சர்ச்’ வாரண்டில் என் மகன் விவேக்கின் பெயர் தான் இருந்தது. அதில் என் பெயர் இல்லை. அப்படி இருக்கும் போது என் வீட்டில் சோதனை நடத்த அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவ்வாறு இருக்க எப்படி அவர்கள் என் வீட்டுக்குள் நுழைய முடிந்தது?

அவர்கள் என் வீட்டில் சோதனை நடத்த விரும்பினால், என்னை இடமாற்றம் செய்திருக்க வேண்டும். ஒரு தலைமைச்செயலாளரை இடமாற்றம் செய்வதற்கு ஒரு முதல்-அமைச்சருக்கு எவ்வளவு நேரம் ஆகி விடப் போகிறது?

உயிருக்கு ஆபத்து

எனவே என் வீட்டில் நடந்த சோதனை தவறானது, இதை ஏற்க முடியாது. நான் எந்த தவறும் செய்யவில்லை.

என் வீட்டில் நடந்த சோதனையை அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகத்தான் நான் பார்க்கிறேன்.

என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த சோதனை நடந்து உள்ளது. இதனை தடுக்க இந்த அரசுக்கு எந்த வித தைரியமும் இல்லை. இந்த சோதனையின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. என்னை எதற்காக குறிவைத்திருக்கிறார்கள் என்பதும் எனக்கு தெரியாது.

ஆனால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. நான் பலருக்கு பெரிய தடையாக அமைந்திருக்கிறேன்.

கைப்பற்றியது என்ன?

இந்த சோதனையின்போது, என் வீட்டில் இருந்து வருமான வரித்துறையினர் எடுத்து சென்ற பணம், தங்க நகை, வைரம், சொத்து ஆவணங்கள் குறித்த ஆதார பட்டியல் (பஞ்சநாமா) என்னிடம் பெரிய ஆதாரமாக உள்ளது. அந்தப்பட்டியல் என் கையில் இருக்கிறது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் பத்திரிகையாளர்களுக்கு இந்த பட்டியல் நகலும் தருகிறேன். உண்மை என்ன என்பது உங்களுக்கு தெரியும்.

சோதனையின்போது என் வீட்டில் இருந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 320 ரொக்கம் மற்றும் என்னுடைய மனைவி மற்றும் மகளிடம் இருந்து 40 முதல் 50 சவரன் நகை, 20 முதல் 25 கிலோ எடையில் வெள்ளியில் செய்யப்பட்ட விநாயகர், வெங்கடேஸ்வரா, மகாலட்சுமி சாமி சிலைகளை கைப்பற்றினர். மற்றபடி பெரிய அளவில் எதையும் அவர்கள் எடுக்கவில்லை.

கோட்டையில் சோதனை

கோட்டையில் உள்ள தலைமைச் செயலாளர் அறையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் உதவியுடன் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தி இருக்கிறார்கள். மாநில அரசின் அனுமதி இல்லாமல் எனது அறையில் அவர்கள் எப்படி நுழையலாம்?

இதுதான் ஒரு மாநில அரசு தலைமைச்செயலாளர் நிலை என்றால், மற்ற அரசு அதிகாரிகளின் நிலை என்ன ஆகும்? இந்த சோதனையின்போது தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது?

ஜெயலலிதா இருந்திருந்தால் தைரியம் வருமா?

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தலைமைச் செயலாளர் அறைக்குள் நுழைந்து சோதனை நடத்த அவர்களுக்கு தைரியம் வருமா?

தலைமைச் செயலாளர் அறையில் சோதனை நடத்த முதல்-அமைச்சரிடம் அனுமதி பெற்றார்களா? தலைமைச்செயலாளர் அறையில் துணை ராணுவத்தினருக்கு என்ன வேலை?

பயந்து ஓடமாட்டேன்

1994-ம் ஆண்டு அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக பணியாற்றிய போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் நிர்வாக பயிற்சி பெற்றேன்.

7 மாதங்களுக்கு முன்பு அவர்தான் என்னை தலைமைச்செயலாளராக பணி அமர்த்தினார். அவருடைய உத்தரவுப்படிதான் நான் செயல்பட்டு வந்தேன். ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படிதான் நடந்து வந்தேன். நான் எந்த கேள்விகளுக்கும் பயந்து ஓடமாட்டேன்.

நான்தான் தலைமைச்செயலாளர்

தலைமைச்செயலாளர் பதவியில் இருந்து என்னை நீக்கியதாக கூறப்பட்டாலும், காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்பட்டாலும், அதற்கான அதிகாரபூர்வமான எந்த வித உத்தரவும் எனக்கு முறைப்படி இதுவரை கிடைக்கவில்லை.

என்னை நியமித்தது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அந்த உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை.

வருமான வரித்துறையினரின் சோதனையைத் தொடர்ந்து, தலைமைச்செயலாளர் பதவியில் இருந்து என்னை நீக்கி விட்டு, திருமதி கிரிஜா வைத்தியநாதனை தலைமைச்செயலாளராக நியமித்து பிறப்பித்த உத்தரவை என்னிடம் வழங்குவதற்கு தமிழக அரசுக்கு தைரியம் இல்லை.

எனவே இப்போதும் தமிழ்நாட்டுக்கு நான்தான் தலைமைச் செயலாளர். தற்போதைய தலைமைச் செயலாளர் வேண்டுமானால் பொறுப்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கலாம்.

என் மகனுக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை

என் மகன் விவேக் அமெரிக்க நாட்டில் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தில் 9 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு இப்போது நாடு திரும்பி உள்ளார். அவர் என்னுடன் இல்லை. அவர் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

என் மகன் என் வீட்டிற்கு வருவது கிடையாது. என் மகனுக்கும் அரசுக்கும் எந்தவிதமான வர்த்தக தொடர்பும் கிடையாது.

தலைமைச்செயலாளர் அறை

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள என்னுடைய அறையிலும் என்னுடைய மகனுக்கு எதிரான வாரண்டை வைத்து சோதனை நடத்தி உள்ளனர்.

தலைமைச்செயலாளர் அறை என்பது என்ன? அது பல்வேறு முதல்-அமைச்சர்களின் ரகசியங்களை, அவர்களின் முடிவுகளை, உத்தரவுகளை, ரகசிய அறிக்கைகளை, அமைச்சர்கள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகியோர் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்குகள் பற்றி ஆவணங்களை கொண்ட அறை. அதில் எவரும் முறையான அனுமதியின்றி நுழைய முடியாது. நுழையவும் கூடாது.

அரசியல் அமைப்பு சட்ட மீறல்

அங்கு என் சம்பந்தமாக, நான் பயன்படுத்தாமல், காலாவதியான எம்.ஆர்.சி.கிளப் உறுப்பினர் அட்டையை மட்டும் கைப்பற்றி உள்ளனர். இது அரசியல் அமைப்பு சட்ட விதிமீறல் இல்லையா? இது அரசியல் அமைப்பு சட்டம் மீதான தாக்குதல் இல்லையா?

போலீஸ், உள்துறையின் கீழ் வருவதால் உள்துறை செயலாளரை வருமான வரித்துறையினர் சந்தித்து இருக்க வேண்டும். பல்வேறு துறைகளுக்கும் பொறுப்பு, பொதுத்துறைதான். (இந்தத் துறை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வசம் உள்ளது).

இந்த சோதனைகள் பற்றி முதல்-அமைச்சருக்கு மத்திய உள்துறை மந்திரி தகவல் தெரிவித்திருக்க முடியும். அப்படி தெரிவித்திருந்தால், எனது இடங்களில் சோதனை நடத்துவதற்கு வழிவிட்டு என்னை இடமாற்றம் செய்திருக்க முடியும்.

அம்மாவை பாதுகாத்தேன்

75 நாட்களாக நான்தான் அம்மாவை (மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா) பாதுகாத்தேன். (இது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த காலகட்டம்).

அம்மா இல்லாததால் இப்போது மாநிலத்தில் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. நான் மக்களுக்கு என் பணியைத் தொடர்வேன்.

மக்களுக்கு பாதுகாப்பு இல்லை

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு, வார்தா புயல் இவற்றையெல்லாம் நான் எப்படி கையாண்டேன் என தமிழக மக்களுக்கே தெரியும்.

மத்திய அரசிடம் தமிழக அரசுக்கும், தமிழகத்திற்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் மரியாதை இல்லை. தற்போதைய சூழ்நிலையில் எவருடைய வீட்டுக்கும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தினர் எப்போது வேண்டுமானாலும் சோதனை என்ற அடிப்படையில் நுழையலாம். தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.

ஆஸ்பத்திரியில் மிரட்டல்

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் என்னுடைய மருமகள் நிறைமாத கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு துணையாக என்னுடைய மகன் விவேக் இருந்து வந்தார்.

மருத்துவமனையில் அவர்கள் இருக்கும் அறையை சூழ்ந்து கொண்டு, என் மகன் விவேக்கை அங்கிருந்து வலுக்கட்டாயமாக மிரட்டி வெளியேற்றி உள்ளனர். இது முறைதானா?

இவ்வாறு அவர் கூறினார்.
No comments:

Post a Comment

FREE DOWNLOAD