snapdeal

Monday, December 5, 2016

இறக்கி விடப்பட்ட இடத்தில் ஏற்றி வைக்கப்பட்ட சாதனை

இறக்கி விடப்பட்ட இடத்தில் ஏற்றி வைக்கப்பட்ட சாதனை





சென்னை: சென்னை ராஜாஜி அரங்கில் ஜெயலலிதா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது 29 ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு அஞ்சலி நிகழ்ச்சியில் இடம் பெற்ற சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.
இதே ராஜாஜி அரங்கில் 1987 ம் ஆண்டில் அவமரியாதைக்கு உள்ளாகி, உதைத்து இறக்கி விடப்பட்ட ஒரு பெண்மணியின் உடல் அதே இடத்தில் தேசிய கொடி போர்த்தப்பட்டு, அரசு மரியாதையுடன் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதனை மட்டுமல்ல ஒரு சவாலும் ஆகும்.
எம்ஜிஆர் மறைவு:


அன்று முதல்வர் எம்ஜிஆர் இறந்தததை அறிந்ததும் அவருடைய வீட்டிற்கு ஜெயலலிதா விரைந்தார். ஆனால் எம்ஜிஆரின் மனைவி ஜானகி, எம்ஜிஆரின் உடலை ஜெயலலிதா பார்க்க அனுமதிக்கவில்லை. எம்ஜிஆர் உடல் வைக்கப்பட்டிருந்த அறையை ஜானகி பூட்டச் செய்தார். எம்ஜிஆரின் உடல் வீட்டின் பின்புறம் வழியாக பொது மக்கள் அஞசலிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, அதை ஒரு சவாலாக ஏற்று, அதிமுகவை தன் வசம் கொண்டு வருவதென உறுதி எடுத்தார்.

தொடர்ந்து, எம்ஜிஆரின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மண்டபத்திற்கு சென்று, எம்ஜிஆரின் தலைமாட்டருகே சோகமே உருவாக நின்று கொண்டார். அந்த இடத்துக்கு எம்ஜிஆரின் மனைவி ஜானகி தாமதமாக வந்ததால், ஜெயலலிதாவுக்கு கிடைத்த முக்கியத்துவம் அவருக்கு கிடைக்கவில்லை. சுமார் 30 மணி நேரம் எம்ஜிஆர் உடலின் தலைமாட்டில் கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்த ஜெயலலிதாவின் தோற்றம், அதிமுக.,வினரின் மனதில் ஆழப் பதிந்தது.
இந்த நிலையில் எம்ஜிஆரின் உடல் அடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டபோது. ஜெயலலிதா உடன் செல்ல விரும்பினார். அதற்காக எம்ஜிஆர் உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ டிரக்கில் ஏற முயன்றார்.
அப்போது நடந்த ஒரு சம்பவம் கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது டிரக்கில் ஏற முயன்ற ஜெயலலிதாவை, ஜானகியின் உறவினர் டிரக்கிலிருந்து கீழே இழுத்து தள்ளினார். எந்த ஒரு அரசியல்வாதியின் இறுதி ஊர்வலத்திலும் நடந்திராத இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் ஜானகியும் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால், லட்சக்கணக்கான மக்கள் காண முடிந்த எம்ஜிஆர் உடல் அடக்கத்தை, ஜெயலலிதாவும் ஜானகியும் காண இயலாமல் போனது. 
வைராக்கியம்:


விரக்தி அடைந்த ஜெயலலிதா, தனது அரசியல் எதிர்காலமே இருண்டு விட்டதாக கருதி, போயஸ் இல்லத்திற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார். இருப்பினும் எம்ஜிஆர் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின், அதிமுக தொண்டர்கள் மனதில், சோகமே உருவான ஜெயலலிதாவின் தோற்றமே நிலைத்து நின்றிருந்ததால், அவர்கள் திரளாக போயஸ் இல்லத்துக்குச் சென்று ஆதரவு தெரிவித்தனர். உற்சாகம் அடைந்த ஜெயலலிதா, அதிமுக., தலைமையை ஏற்கத் தயாரானார்.
அதன் எதிரொலியாகவே இன்று ஜெயலலிதா உடல் அதே ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிலை உருவானது மட்டுமல்ல, பார்லிமென்டின் இரு அவைகளிலும் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கள் தெரிவிக்கப்பட்டு நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இவ்வாறு ஒரு முதல்வர் மறைவுக்காக பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்படுவது, பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் 20க்கும் மேற்பட்ட மாநில முதல்வர்களும் நேரில் அஞ்சலி செலுத்த வருவதுமான புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment

FREE DOWNLOAD