snapdeal

Sunday, December 25, 2016

வங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 30–ந் தேதிக்கு பிறகும் நீடிக்கும்?


புதுடெல்லி, 

தேவையான அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்காததால் வங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் 30–ந் தேதிக்கு பின்னரும் நீடிக்கும் என தெரியவந்துள்ளது.

ஈடுகொடுக்க முடியவில்லை 

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் வங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இப்போது வங்கிகளில் வாரம் ரூ.24 ஆயிரமும், ஏ.டி.எம்.களில் ஒரு நாளைக்கு ரூ.2,500 வரை மட்டுமே எடுக்க முடியும்.

புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகங்கள், ரிசர்வ் வங்கி ஆகியவற்றால் புதிய ரூபாய் நோட்டுகள் தேவையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. நவம்பர் 9–ந் தேதியில் இருந்து டிசம்பர் 19–ந் தேதி வரை ரூ.15.4 லட்சம் கோடி செல்லாத நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கி இந்த காலத்தில் ரூ.5.92 லட்சம் கோடி தான் வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கியுள்ளது.

புத்தாண்டிலும் தொடரும் 

மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு எப்போது விலக்கப்படும் என்று அறிவிக்கவில்லை. நிதித்துறை செயலாளர் அசோக் லாவசா சமீபத்தில், டிசம்பர் 30–ந் தேதிக்கு பின்னர் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியும் 50 நாட்கள் ‘கெடு’ வழங்குங்கள் என்று கூறியிருந்தார். அந்த கெடுவும் நெருங்கிவிட்டது. ஆனால் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் புதிய ஆண்டிலும் தொடரும் என வங்கிகள்தரப்பில் கூறப்படுகிறது. பணத்தட்டுப்பாடு காரணமாக அரசு அறிவித்தபடி இப்போது வங்கிகளில் ஒரு வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் கூட வழங்க முடியவில்லை. பணம் கையிருப்பை பொறுத்து குறைவாகத் தான் வழங்க முடிகிறது.

படிப்படியாக தளர்த்த வேண்டும் 

பெரும்பாலானோர் நினைப்பதுபோல, ஜனவரி 2–ந் தேதியில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்படாது. புதிய ரூபாய் நோட்டு சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று ஒரு பொதுத்துறை வங்கி அதிகாரி கூறினார்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள், சிறு, குறு தொழில் முனைவோர், பெரிய கம்பெனிகள் ஆகியோரின் பெரிய அளவிலான பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கு வங்கிகள் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும். எனவே படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவது தான் ஏற்புடையதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சில காலம் தொடரும் 

பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவும் சமீபத்தில், வங்கிகளுக்கு அதிகமான அளவில் பணம் வழங்காமல், பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்க முடியாது என்று கூறியிருந்தார்.

வங்கி ஊழியர்கள் சங்கமும் கட்டுப்பாடுகளை ஒரே நடவடிக்கையில் நீக்கிவிட முடியாது, வங்கிகள் நலன் கருதியும், அதிகமான அளவில் கூடும் வாடிக்கையாளர்களின் நலன் கருதியும் இன்னும் சில காலத்துக்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று கருத்து தெரிவித்துள்ளன.

வியாபாரிகள் காத்திருக்கிறார்கள் 

வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஹர்விந்தர் சிங் கூறும்போது, ‘புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் நிலை குறித்து அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க ஜனவரி 2–ந் தேதி கட்டுப்பாடுகளை நீக்குவது கடினம். சிறு, குறு தொழில் முனைவோரும், சிறு வியாபாரிகளும் தங்களுக்கு தேவையான பணத்தை எடுப்பதற்காக அந்த நாளுக்காக காத்திருக்கிறார்கள்’ என்றார்.




No comments:

Post a Comment

FREE DOWNLOAD