snapdeal

Friday, November 18, 2016

ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி முடங்கியது பணம் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு||Conversion-of-banknotes-work-stalled

ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி முடங்கியது பணம் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு||Conversion-of-banknotes-work-stalled



  • சென்னை,

வங்கிகளில் பணத்தட்டுப்பாடு காரணமாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி முற்றிலுமாக முடங்கியது. வரிசையில் காத்திருந்தும் பணம் கிடைக்காததால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர்.

ரூபாய் நோட்டுகள் காலி

செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி வருகிறார்கள். தொடக்கத்தில் ஒரு நபர் ரூ.4 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ளலாம் என்று இருந்தது, பின்னர் ரூ.4,500 ஆக அதிகரிக்கப்பட்டு, தற்போது ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒருவரே பலமுறை ரூபாய் நோட்டுகளை மாற்றுவதை தடுக்கும்வகையில், விரலில் அடையாள மை வைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. வங்கிகள் முன்பு நேற்று பொதுமக்கள் காலை முதலே குவிந்தனர். முதலில் வந்த சிலருக்கு மட்டுமே பணம் கொடுக்க முடிந்தது. சிறிது நேரத்திலேயே பல வங்கிகளில் புதிய ரூபாய் நோட்டுகள் காலியாகிவிட்டன.

மக்கள் ஏமாற்றம்

இதனால் சில வங்கிகளில் வரிசையில் காத்திருந்தவர்களிடம் பணம் காலியாகிவிட்டது. இன்னும் சில மணி நேரத்தில் பணம் வரும் என்றனர். சில வங்கிகளில் நாளை (இன்று) வருமாறு கூறி அனுப்பிவிட்டனர். ரிசர்வ் வங்கியில் இருந்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு ரூபாய் நோட்டுகளை அனுப்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கலே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

தினமும் கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை செய்யும் வங்கிகளுக்கு ரூ.13 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை குறைவான தொகையே ரிசர்வ் வங்கி வினியோகம் செய்ததாக தெரிகிறது. இதனால் வரிசையில் காத்து நின்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல நேரிட்டது. சில இடங்களில் பொதுமக்கள் வங்கி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முடங்கியது

சில வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூட பணம் கொடுக்க முடியாமல் ஊழியர்கள் திணறினார்கள். இதனால் பல வங்கிகளில் பழைய நோட்டுகள் டெபாசிட் செய்யும் பணி மட்டுமே நடைபெற்றது. பணம் மாற்ற வந்தவர்களையும் ஊழியர்கள் டெபாசிட் செய்யும்படி அறிவுறுத்தினார்கள்.

சென்னையில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் நேற்று இதே நிலைதான் காணப்பட்டது. இதனால் சென்னையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணிகள் முடங்கிப்போனது. பல வங்கிகளில் ‘பணம் இருப்பு இல்லை, டெபாசிட் மட்டும் செய்யலாம்’ என்ற அறிவிப்பு தொங்கவிடப்பட்டு இருந்தது. சில வங்கிகளில் விரலில் வைப்பதற்கு அடையாள மை இல்லாததால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என்று கூறினர்.

அதேசமயம் சில வங்கி அதிகாரிகள் தங்களுக்கு தேவையான நபர்களுக்கு மட்டும் பணத்தை மாற்றி கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜீவ் என்பவர் கூறுகையில், தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் சிலருக்கு ரூ.5 ஆயிரம் வரை கொடுத்தார்கள். பலருக்கு பணம் இல்லை நாளைக்கு வாருங்கள் என்று கூறி அனுப்புகிறார்கள். வங்கி ஊழியர்களே சிலரிடம் ‘கமிஷன்’ வாங்கிக்கொண்டு பணத்தை மாற்றிக் கொடுக்கிறார்கள் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

ஏ.டி.எம்.களும் சீராகவில்லை

இன்னும் பெரும்பாலான ஏ.டி.எம். எந்திரங்கள் மூடியே கிடக்கின்றன. பல ஏ.டி.எம்.களிலும் பணம் நிரப்பிய சில மணி நேரத்தில் காலியானது. வங்கியிலும் பணம் இல்லை, ஏ.டி.எம். எந்திரத்திலும் பணம் இல்லை என்ற பரிதாப நிலையால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

ரிசர்வ் வங்கியில் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு நேற்று மிகவும் குறைவானவர்களே வந்திருந்தனர். அவர்களின் கையில் அடையாள மை ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளதா? என்று சோதித்த பின்னரே போலீசார் உள்ளே அனுமதித்தனர். பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 10 ரூபாய் நாணயங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது.

தவிக்கும் வங்கி ஊழியர்கள்

பணத்தட்டுப்பாடு காரணமாக ரிசர்வ் வங்கி நெடுங்காலமாக பயன்படுத்தாமல் வைத்திருந்த பழைய, கசங்கிப்போன 100, 50 ரூபாய் நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விட்டுள்ளது. பயன்படுத்த தகுதியற்றது என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கிகளுக்கு வந்துள்ளன.

அந்த நோட்டுகளிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் வங்கி ஊழியர்கள் திணறி வருகிறார்கள். ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு எந்திரங்களால் கூட அவற்றை சரியாக எண்ண முடியவில்லை. அதிலிருந்து வெளியாகும் தூசு வங்கி ஊழியர்களுக்கு இருமல், தும்மல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. சில ஊழியர்கள் முகத்திரை (மாஸ்க்) அணிந்தபடி வேலை பார்த்தனர்.


No comments:

Post a Comment

FREE DOWNLOAD