snapdeal

Wednesday, November 9, 2016

மரணத்திற்கு பிறகும் செயல்படும் மரபணுக்கள்!

 
 
பிறப்பில் துவங்கும் மனிதனின் வாழ்க்கைப்பயணம் இறப்பில் முடிந்து விடுகிறது என்பதுதான் பொதுவான புரிதல். உயிரும் உடலும் இணைந்த மனித வாழ்க்கையின் நிலையாமையை பின்வரும் குறள் மூலம் விளக்குகிறார் திருவள்ளுவர்,

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு


அதாவது, உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான் என்பதே குறள் சொல்லும் செய்தி.
ஆக, பறவைக் குஞ்சுகளை பிரிந்த முட்டைகள் பயனற்ற குப்பையாகி விடுவதைப்போல, உயிரைப் பிரிந்த மனித உடலில் உள்ள மூளை, நுரையீரல், இதயம் போன்ற பாகங்களின் இயக்கங்கள் அனைத்தும் நின்றுபோய் மனித உடலும் பயனற்றதாகி விடுகிறது.

ஆனால், இறந்த பின்னும் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட பல பாகங்களை தானம் செய்ய முடியும். ஆனால் இந்த பாகங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் இறந்த உடலில் இருந்து அகற்றப்பட்டு சரியான வெப்பநிலையில் பதப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் அவற்றை பிறருக்கான மாற்று பாகங்களாக பயன்படுத்த முடியும். இல்லையென்றால் அவையும் பயனற்ற குப்பைகள்தான்.

ஏனென்றால், உயிரைப் பிரிந்த உடலில், ரத்த ஓட்டம் நின்றுபோய்விடும். அதனால், உடல் பாகங்களிலுள்ள உயிரணுக்களின் இயக்கத்துக்குத் தேவையான பிராண வாயு இல்லாமல் போவதன் காரணமாக பாகம் மொத்தமும் செயலிழந்துபோகும்.

அப்படியானால், இறப்புதான் மனித வாழ்க்கையின் முற்றுப்புள்ளியா என்று கேட்டால், அது விவாதத்துக்கு உட்பட்டது என்றுதான் கூற வேண்டும். ஆனால், எலி மற்றும் மீன் ஆகிய உயிரினங்கள் மீதான சமீபத்திய ஆய்வு ஒன்றில், உயிரிழப்பு அல்லது இறப்புக்குப் பின் சில நாட்கள் வரை உடலிலுள்ள மரபணுக்கள் தொடர்ந்து செயல்படுகின்றன எனும் அதிசயமான அறிவியல் உண்மை, உலகில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியல் ஆய்வாளர் பீட்டர் நோபல் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், அடிப்படையில் மரபணு செயல்பாடுகளை அளவிடக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம் பரிசோதிக்கப்பட்டது.

ஆனால் ‘இந்த பரிசோதனையை ஒரு இறந்த உடல் மீது மேற்கொண்டு பார்த்தால் என்ன?’ எனும் ஆர்வத்தின் காரணமாக, இறப்புக்குப் பின் ஒரு உயிரினத்தின் உடலில் மரபணு செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதைக் கண்டறிய முற்பட்டது ஆய்வாளர் நோபல்லின் ஆய்வுக்குழு. ஆனால், மனித சடலங்களில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் மற்றும் கல்லீரல் திசுக்கள் மீதான இதற்கு முந்தைய ஆய்வு ஒன்றில், சில மரபணுக்கள் செயல்படுவது கண்டறியப்பட்டு உள்ளது என்பதால், சுமார் 1000 மரபணுக்களின் செயல்பாடுகளை பரிசோதிக்க முடிவு செய்தனர் நோபல் தலைமையிலான ஆய்வாளர்கள்.

இறந்துபோன எலிகள் மற்றும் வரிக்குதிரை மீன்கள் ஆகியவற்றின் உடல்களில் உள்ள, தேர்ந்தேடுக்கப்பட்ட 1000 மரபணுக்களின் செயல்பாடுகள் எலிகளில் சுமார் 2 நாட்கள் வரையிலும், வரிக்குதிரை மீன்களில் நான்கு நாட்கள் வரையிலும் ஆய்வு செய்யப்பட்டது.

தொடக்கத்தில், இறப்புக்குப் பின் சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்களுக்குள் எலிகள் அல்லது மீன்களின் மரபணுக்களுடைய செயல்பாடுகள் நின்றுபோகும் என்றுதான் நினைத்தனர் ஆய்வாளர்கள். ஆனால் மிகவும் ஆச்சரியப்படும் விதமாக, எலிகள் மற்றும் வரிக்குதிரை மீன்களின் பெரும்பாலான மரபணுக்களின் செயல்பாடுகள், அவை இறந்த பின் முதல் 24 மணி நேரங்களில் மிகவும் அதிகமானதும், அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்ததும் தெரியவந்தது.

முக்கியமாக, வரிக்குதிரை மீன்களில் மட்டும் சில மரபணுக்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் செயல்பட்ட வண்ணமாய் இருந்தது கண்டறியப்பட்டது. சுவாரசியமாக, இறப்புக்குப்பின் செயல்பட்ட மரபணுக்களில் திசுக்காயத்தை அதிகப்படுத்துகின்ற, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிற மற்றும் உளைச்சலுக்கு எதிராக செயல்படுகின்ற மரபணுக்கள் ஆகியவை அதிகமாக இருந்தது தெரியவந்தது.

ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக, பிறப்புக்குப்பின் அவசியப்படாத, சிசுக்களில் மட்டுமே இயங்கக்கூடிய பல மரபணுக்கள் இறப்புக்குப் பின்னும் செயல்பட்டது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வினோதமான மரபணு செயல்பாட்டுக்கான திட்டவட்டமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. என்றாலும், இறந்த உடல்களில் உள்ள உயிரணு சூழல்கள் சிசுக்களில் உள்ளது போலவே இருக்கும் என்பதால், அதன் காரணமாகக் கூட இந்த மரபணு செயல்பாடுகள் நிகழலாம் என்று விளக்குகின்றனர் ஆய்வாளர்கள்.

இது ஒரு புறமிருக்க, அதிர்ச்சியூட்டும் விதமாக, இறந்த உடல்களில் புற்றுநோயைத் தூண்டும் மரபணுக்களின் செயல்பாடுகள் அதிகமானதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இறந்தவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு பொருத்தப்படும் மாற்று பாகங்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பதற்கு காரணம் என்ன என்பது இதுவரை தெரியாமல் இருந்து வந்தது.

ஆனால் இறந்த உடல்களில் புற்றுநோயை தூண்டும் மரபணுக்களின் செயல்பாடுகள் அதிகமாக இருப்பதன் காரணமாகக் கூட, மாற்று பாகங்களில் புற்றுநோய் ஏற்படலாம் என்கிறார் ஆய்வாளர் நோபல். ஆக, இறந்த உடல்களின் மரபணு செயல்பாடுகள் குறித்த இந்த ஆய்வின் மூலமாக, மாற்று பாகங்களின் தரம் குறித்த புதிய உண்மைகளை இனி கண்டறிய முடியும் என்கின்றனர் பிற ஆய்வாளர்கள்.

அதுமட்டுமல்லாமல், ஒருவர் இறந்துபோன நேரத்தை துல்லியமாக கணக்கிடவும் இந்த புதிய ஆய்வு முடிவுகள் உதவும் என்கிறார் ஹவாயில் உள்ள ஹோனோலூலூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தடயவியல் விஞ்ஞானி டேவிட் கார்டர்.

முக்கியமாக, ஒரு உயிரினம் உயிருடன் இருக்கும்பொழுது, உயிரணு வளர்ச்சியை தூண்டுகிற மரபணுக்கள் உள்ளிட்ட பல மரபணுக்களின் செயல்பாடுகள், புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் திறன்கொண்ட சில சக்திவாய்ந்த மரபணுக்களால் தடை செய்யப்பட்டு, அதே நிலையில் தொடர்ந்து பராமரிக்கப்படும்.

ஆனால் அதே உயிரினம் இறந்துபோன பின்னர், புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் மரபணுக்கள் போன்ற பல சக்திவாய்ந்த மரபணுக்கள் செயலிழந்து போய் விடுவதால், புற்றுநோய் ஏற்படுத்துகிற மரபணுக்கள் உள்ளிட்ட பல ஆபத்தான மரபணுக்கள் செயல்படத் தொடங்கிவிடும் என்பதும் இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது என்கிறார் ஆய்வாளர் நோபல்.

ஆக மொத்தத்தில், ‘ஒரு உயிரினத்தின் இறப்பை ஆய்வு செய்வதன் மூலம், உயிர்வாழ்க்கைத் தொடர்பான பல அறி வியல் உண்மைகளை கண்டறிய முடியும்’ என்பதே இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ள உண்மை’ என்கிறார் ஆய்வாளர் பீட்டர் நோபல்! 
 


No comments:

Post a Comment

FREE DOWNLOAD