snapdeal

Sunday, July 3, 2016

காதலை ஏற்க மறுத்தார்; ‘என்னை இழிவுபடுத்தி பேசியதால் சுவாதியை வெட்டிக்கொன்றேன்’; கைதான ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் .

‘என்னை இழிவுபடுத்தி பேசியதால் சுவாதியை அரிவாளால் வெட்டிக்கொன்றேன்’ என்று கைதான ராம்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.என்ஜினீயர் சுவாதி கொலை

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ந் தேதி காலையில் சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி(வயது 24) கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதான ராம்குமார், போலீசாரிடம் சிக்கிய போது கழுத்தை அறுத்துக்கொண்டதால் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.ராம்குமார் வாக்குமூலம்

நேற்று ராம்குமாரை மருத்துவ குழுவினர் பரிசோதித்து அவரது உடல்நிலை மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தனர். ராம்குமாரால் நன்றாக பேச முடிந்தது. எனவே அவரிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையை போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டனர். ராம்குமார் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயராமன்(பாளையஞ்செட்டிகுளம்), மயிலேறும் பெருமாள்(வி.எம்.சத்திரம்) ஆகியோரும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டனர்.

ராம்குமார் வாக்குமூலம் அளித்தபோது அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களும் அங்கிருந்தனர். இடையிடையே தொண்டை வலிப்பதாக கூறிய ராம்குமாருக்கு உடன் இருந்த டாக்டர்கள் தேவையான ஆலோசனைகள் வழங்கி உதவி செய்தனர்.

இந்த வாக்குமூலத்தின்போது, சுவாதி கொலையைப் பற்றி கேட்டதற்கு சற்று அமைதியாக இருந்த ராம்குமார் பின்னர் ஒவ்வொரு விஷயமாக கூறத்தொடங்கியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாக்குமூலத்தில் ராம்குமார் கூறியதாக போலீசார் தெரிவித்த விவரம் வருமாறு:-‘பேஸ்புக்’ மூலம் அறிமுகம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் நான் என்ஜினீயரிங் படித்தேன். படிக்கும்போதே செல்போனில் ‘பேஸ்புக்’ மூலம் பலர் எனக்கு நண்பர்களாக கிடைத்தனர். படித்து முடித்ததும் வேலை தேடி சென்னை சென்றேன். அங்கும் எனக்கு சில நண்பர்கள் ‘பேஸ்புக்’ மூலம் கிடைத்தார்கள். அப்படி கிடைத்தவர்களில் ஒருவர்தான் சூரியபிரகாஷ். நாங்கள் இருவரும் அவ்வப்போது சந்தித்து கொள்வோம்.

அவரது ‘பேஸ்புக்’ கணக்கிற்கு ஒரு இளம்பெண் அவ்வப்போது தகவல் அனுப்பி வந்ததை நான் கவனித்தேன். அந்த பெண் யார்? என்று அவரிடம் கேட்டேன். இரண்டு மூன்று முறை கேட்ட பின்பு, அந்த பெண்ணின் பெயர் சுவாதி என்றும், சாப்ட்வேர் என்ஜினீயராக அவர் ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் கூறினார்.

சுவாதியின் படத்தைப் பார்த்ததும் அவரை எனக்கு பிடித்து விட்டது. என்னை ‘பேஸ்புக்’கில் அவரிடம் அறிமுகப்படுத்தி வைக்குமாறு சூரியபிரகாசிடம் கேட்டேன். அவர் மூலம்தான் எனக்கு சுவாதியின் அறிமுகம் கிடைத்தது. எனக்கும் ‘பேஸ்புக்’கில் சுவாதி தகவல் அனுப்பினார். பதிலுக்கு நானும் அனுப்பினேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுவாதியை சந்தித்தபோது அவர் பழகிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது.காதலிக்க தொடங்கினேன்

அவர் என்னிடம் சாதாரணமாகத்தான் பழகினார். என்றாலும் நான் அவரை காதலிக்க தொடங்கினேன்.

ஆனால், அந்த காதலை அவரிடம் வெளிப்படுத்தும்போது எனக்கு அப்படி ஒரு எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. தெருவில் சந்தித்தபோதும், கோவிலில் வைத்தும் 3 முறை அவரிடம் எனது காதலை தெரிவித்தேன். அதை ஏற்றுக் கொள்ள மறுத்த அவர், “நான் சாதாரணமாகத்தான் உன்னுடன் பேசி பழகினேன். அதை காதல் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது” என்று கூறி எனது காதலை நிராகரித்து விட்டார்.இழிவுபடுத்தினார்

அதன்பின்னர் மேலும் 2 முறை அவர் மீது நான் கொண்டுள்ள காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் எனது காதலை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து எனது நண்பர் சூரியபிரகாஷ் மூலம் எனது காதலை அவரிடம் தெரிவிக்குமாறு கூறினேன். அவரும் சுவாதியிடம் சென்று நான் காதலிப்பதாக கூறியுள்ளார். அதைக்கேட்டு சுவாதி கோபம் அடைந்து நீங்கள் இருவருமே இனிமேல் என்னை சந்தித்து பேச வேண்டாம் என்று கூறி விட்டார்.

இது குறித்து சுவாதியை நான் சந்தித்து கேட்டபோது எனது தோற்றம், நடை, உடை, எனது பொருளாதாரம் ஆகியவற்றை கூறி என்னை மிகவும் இழிவுபடுத்தி பேசினார். அவர் அப்படி கூறியதால் நான் கோபம் அடையவில்லை. மாறாக அவரை எப்படியும் என் வசப்படுத்த விரும்பி கடினமான பொருளாதார சூழ்நிலையிலும் அவருக்கு பிடித்தது போன்று பேண்ட், சட்டை வாங்கி அணிந்து கொண்டு அவரை பின்தொடர்ந்து சென்றேன். இப்படி ஒரு மாதத்துக்கும் மேலாக அவரை பின்தொடர்ந்து சென்று காதலை ஏற்று கொள்ளும்படி சுவாதியை தொடர்ந்து வற்புறுத்தினேன்.வாழைத்தார் வெட்டும் அரிவாள்

நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை. எனது காதலை ஏற்றுக்கொள்ளாததாலும், என்னை மிகவும் இழிவுபடுத்தியதாலும் சுவாதிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணினேன். சுவாதி மீது நான் வைத்து இருந்த அன்பு, அவர் என்னை மிகவும் இழிவுபடுத்திய பின்னர் கோபமாக உருவெடுத்தது. இதனால் என் மனதில் சுவாதியை பழிவாங்க வேண்டும் என்ற ஒரு வெறியை ஏற்படுத்தியது. என்னை இழிவுபடுத்தி திட்டிய சுவாதியின் வாயை அரிவாளால் வெட்ட வேண்டும் என்று நினைத்து திட்டமிட்டேன். இதற்காக நான் எனது சொந்த ஊருக்கு வந்தேன். அங்கு வாழைத்தார் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் அரிவாள் ஒன்றை வாங்கி அதை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சென்னைக்கு எடுத்து சென்றேன்.

சுவாதி எப்போதும் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்துதான் செங்கல்பட்டுக்கு ரெயிலில் வேலைக்கு சென்று வந்தார் என்பது எனக்கு தெரியும். ரெயில் நிலையம் வரும் அவர், அங்கு ஒரு இடத்தில் ரெயில்வரும் வரை சற்று நேரம் உட்கார்ந்து இருப்பார். அவ்வாறு உட்கார்ந்து இருக்கும் நேரத்தில் அவருக்கே தெரியாமல் பின்புறமாக சென்று அவரது வாயில் வெட்ட வேண்டும் என்று நான் திட்டமிட்டு இருந்தேன்.

கழுத்தில் வெட்டு விழுந்தது

அதற்காக சில நாட்கள் அவரை நான் பின்தொடர்ந்து கண்காணித்தேன். என்னைப் பார்த்தும், பார்க்காதது போல் சுவாதி நடந்துகொண்டார். கடந்த 24-ந் தேதியன்று காலையில் அவரை வெட்ட திட்டமிட்டு அரிவாளை எனது தோள் பையின் உள்ளே வைத்து எடுத்துச் சென்றேன். நான் எதிர்பார்த்தது போன்று சுவாதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வழக்கமாக உட்காரும் இடத்தில் உட்கார்ந்து இருந்தார். அவரின் பின்புறமாக சென்று அரிவாளை அவரது வாயில் வீசினேன். ஆனால், வாயில் வெட்டு விழுவதற்கு பதிலாக எதிர்பாராதவிதமாக கழுத்தில் வெட்டு விழுந்தது.

இதைப்பார்த்து ரெயில் நிலையத்தில் நின்ற மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினார்கள். கையில் அரிவாளுடன் நான் நின்றிருந்ததால் யாரும் என் அருகே உடனே ஓடிவரவில்லை. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் சரமாரியாக வெட்டி சுவாதியை கொன்று விட்டு, அரிவாளை ரெயில் நிலையத்திலேயே வீசி விட்டு தப்பி ஓடினேன்.

சட்டையில் ரத்தக்கறை

என் சட்டை மீது லேசான ரத்தக்கறை ஏற்பட்டு இருந்தது. அதே நேரத்தில் ரெயில் நிலையத்தில் இருந்து நான் தப்பி ஓடினால் எல்லோரும் என்னை கவனிப்பார்கள் என்று கருதி, அங்கிருந்து ஓட்டமும், நடையுமாக நான் தங்கி இருந்த சூளைமேடு பகுதியில் உள்ள ஏ.எஸ்.மேன்சன் என்ற விடுதிக்கு வந்துவிட்டேன். எனது சட்டையை கழற்றி உடனடியாக ரத்தக்கறையை சுத்தம் செய்து விட்டேன்.

சுவாதி கொலை செய்யப்பட்ட தகவலை தொலைக்காட்சியில் பார்த்து நான் உறுதி செய்து கொண்டேன். எனவே இனிமேலும் நாம் இங்கேயே தொடர்ந்து தங்கி இருந்தால் எப்படியாவது போலீசார் நம்மை பிடித்துவிட வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன். எனவே ஊருக்கு தப்பிச் சென்றுவிட முடிவு செய்து எனது சொந்த ஊரான மீனாட்சிபுரம் கிராமத்துக்கு வந்து விட்டேன்.

சொல்லாமல், கொள்ளாமல் திடீரென நான் வீட்டுக்கு வந்ததை அறிந்து என்னுடைய குடும்பத்தினர் அதுபற்றி கேட்டனர். உடல்நிலை சரியில்லாததால் ஊருக்கு வந்துவிட்டேன் என்று கூறி சமாளித்தேன். முதலில் சற்று பதற்றமாக இருந்தது. என் வீட்டில் உள்ளவர்களும் சுவாதி கொலையை பற்றி பேசினார்கள். அவர்களுடன் நானும் சகஜமாக இது பற்றி பேசினேன்.

எனது உருவத்தை வெளியிட்ட போலீசார்

போலீசார் சென்னை பகுதியில்தான் கொலையாளி பதுங்கி இருப்பான்? என்ற கோணத்தில் முதலில் விசாரித்ததால் எப்படியும் தப்பி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். அதே நேரம் கண்காணிப்பு கேமராவில் பதிவான எனது உருவத்தை போலீசார் வெளியிட்ட பின்பு எப்படியும் சிக்கிக் கொள்வோம் என்ற பயம் வந்து விட்டது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு போலீசார் எனது கிராமத்துக்கு வந்து என்னைப் பற்றி ரகசியமாக விசாரித்துள்ளனர். சாதாரண உடையில் வந்த சிலர், எனது வீட்டில் என்னைப்பற்றி விசாரித்ததாக என்னுடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். அது போலீசாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். எனது நினைப்பு சரியாகவே இருந்தது.

சிக்கிக்கொண்டேன்

போலீஸ் என்னை பிடிக்க வந்து விட்டால், அதற்கு முன்பு தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். பகல் நேரங்களில் ஆடுமேய்க்கச் சென்றேன். ஆனாலும், சுவாதி கொலை தொடர்பாக செய்தித்தாள்களில் என்ன தகவல்கள் வருகிறது என்பதை தினமும் படித்து விடுவேன்.

எல்லாம் எனது எதிர்பார்ப்புபடி நடந்திருந்த வேளையில், நான் எதிர்பார்க்காத ஒன்றும் நடந்து விட்டது. போலீசார் பகலில்தான் என்னை பிடிக்க வருவார்கள் என்று நினைத்தேன். ஆனால், இரவில் வந்ததால் சிக்கிக் கொண்டேன். எனது தற்கொலை முயற்சியையும் போலீசார் தடுத்து விட்டனர்.  இவ்வாறு வாக்குமூலத்தில் ராம்குமார் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

News source dailythanthi

No comments:

Post a Comment

FREE DOWNLOAD