snapdeal

Sunday, June 5, 2016

மாநகராட்சி ஊழியர்களை ஆளும்கட்சி கவுன்சிலர்கள்... கிழி... கிழி... கிழி! சென்னையில் தோல்விக்கு காரணம் என 'பகீர்' புகார்!

வாக்காளர் பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பெயர்களை திட்டமிட்டு நீக்கியதே, சென்னையில் ஆளும்கட்சிக்கு பலத்த தோல்வி ஏற்பட்டதற்குக் காரணம் என கவுன்சில்
கூட்டத்தில், மாநகராட்சி ஊழியர்களை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கிழித்து எடுத்தனர்.
சட்டசபைத் தேர்தலில், சென்னையில், 10 தொகுதிகளை ஆளும்கட்சி இழந்து, பெரும் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி கூட்டம், மேயர் சைதை துரைசாமி தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கமிஷனர் சந்திரமோகன், துணை கமிஷனர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
8,000 ஓட்டு எங்கே?
கூட்டத்தில், 110வது வார்டு (அ.தி.மு.க.,) கவுன்சிலர் சந்திரசேகரன் பேசுகையில், ''வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உட்பட தேர்தல் பணிகளை வருவாய் துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தான் செய்தனர். ஆயிரம் விளக்கு தொகுதியில், தேர்தல் பணியாற்றிய ஊழியர்கள், 8,000 ஓட்டுகளை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். இதுவே தோல்விக்கு காரணம். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்,'' என்றார்.
அதே கட்சியைச் சேர்ந்த 42வது வார்டு கவுன்சிலர் அஞ்சுலட்சுமி, ''மாநகராட்சி கமிஷனரை தவிர, ஒட்டுமொத்த மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும், அ.தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பணியாற்றினர். நமது கட்சியின் துரோகிகள், அந்த அதிகாரிகளுக்கு உறுதுணையாக செயல்பட்டனர். வயதான ஊழியர்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியைச் செய்ய முடியவில்லை,'' என்றார்.
அத்தகைய ஊழியர்களைக் கண்டறிந்து, கிராமப் பகுதிகளில் பணிஅமர்த்தவும், துடிப்பானவர்களை சென்னையில் பணியமர்த்தவும் வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதே கருத்தை, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பலரும் பிரதிபலித்தனர். இதற்கு பதிலளித்து, மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:
பெயர்கள் அழிப்பு?
சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. முதலில் வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியல், இரண்டாவது துணை பட்டியல், அதன் பிறகு வெளியிடப்பட்ட இறுதி பட்டியல் ஆகியவையுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, ஓட்டுச்சாவடியில் முகவர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வைத்திருந்த வாக்காளர் பட்டியலில், பல பெயர்கள் அழிக்கப்பட்டிருந்ததாக புகார்கள் வந்துள்ளன.
இது குறித்து, நான் ஏற்கனவே மாவட்ட தேர்தல் அலுவலரான, மாநகராட்சி கமிஷனரிடம் கூறியுள்ளேன். மாநகராட்சி கவுன்சிலர்கள் எந்தெந்த தொகுதியில், எந்த வார்டுகளில் அப்படி நடந்துள்ளது என்பதை கள ஆய்வில் கண்டு பிடிக்க வேண்டும். இதை முக்கிய பணியாக ஏற்று கவுன்சிலர்கள், களப்பணியை துவக்க வேண்டும்.
மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோரை மீறி, கீழ்நிலையில் பணியாற்றிய எந்த அதிகாரிகள் எல்லாம் இந்த விஷயத்தில் தவறு செய்தனர் என கவுன்சிலர்கள் கண்டறிய வேண்டும். அப்படிக் கண்டு பிடித்து, ஆதாரத்துடன் விவரம் கொடுத்தால், அதன் மீது விரிவான விசாரணை நடத்தி, சதிச்செயலில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, மேயர் சைதை துரைசாமி கூறினார்.
மாநகராட்சி ஊழியர்கள் மீது, ஆளும்கட்சி கவுன்சிலர்கள் வைத்துள்ள இந்த 'பகீர்' புகார், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை, பெயர்கள் நீக்கப்பட்டது உறுதியாகி, சில ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதன் விளைவுகள் எப்படியிருக்குமென்பதை யூகிக்க முடியவில்லை.

துரோகம் தந்த தோல்வி!
சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த, மாநகராட்சி கவுன்சிலர்கள் தாடி மா.ராஜூ, நீலாங்கரை முனுசாமி, மாதவரம் தட்சிணாமூர்த்தி ஆகியோர் நேற்றைய மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் மாநகராட்சி கூட்டத்தில் பேச அனுமதிக்கப்பட்டனர். மாதவரம் தட்சிணாமூர்த்தி பேசும்போது, 'நமது கட்சி துரோகிகளால் தோல்வி அடைந்தேன்,' என ஆதங்கப்பட்டார்.
மாநகராட்சி ஊழியர்களால் தான், பல தொகுதிகளில், தோல்வி கிடைத்தது என்று, கவுன்சிலர்கள் பலரும் புகார் கூறும்போதே, 'சொந்தக்கட்சி துரோகிகளால் தான் தோல்வி அடைந்தேன்' என்று, தோற்றுப்போன வேட்பாளரே சொல்வது, இந்த தோல்விக்கான உண்மைக்காரணங்கள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

FREE DOWNLOAD