snapdeal

Monday, May 30, 2016

அரவக்குறிச்சி தேர்தல் செலவு ரூ.125 கோடி 'அம்பேல்' : அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் புலம்பல்


கரூர்: அரவக்குறிச்சி தேர்தல் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள் செலவு செய்த, 125 கோடி ரூபாய் வீணானதாக, அவர்கள் புலம்பி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி தொகுதியில் பணம் பலம்மிக்க, தி.மு.க., வேட்பாளர் பழனிசாமியை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி களமிறக்கப்பட்டார். இதற்கிடையில், அரவக்குறிச்சி அடுத்த, அய்யம்பாளையம், அ.தி.மு.க., பிரமுகர் அன்புநாதன் வீட்டில் நடந்த ரெய்டில், 4.80 கோடி ரூபாய் பணம் சிக்கியது.

அதுபோல், தி.மு.க., வேட்பாளர் பழனிசாமி வீடு மற்றும், அவரது மகன் சிவராமன் வீட்டில் நடந்த சோதனையில், 1.98 கோடி ரூபாய் சிக்கியது. வாக்காளர்களுக்கு இரண்டு கட்சி வேட்பாளர்களும், பணம் பட்டுவாடா செய்வதாக கூறி, 118க்கும் மேற்பட்ட புகார்கள், தேர்தல் கமிஷனுக்கு சென்றதால், மே, 25ம் தேதியும், அதன்பின், ஜூன், 13ம் தேதியாகவும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் தேதி ரத்து செய்யப்படுவதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதனால், 125 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்த, அ.தி.மு.க., - தி.மு.க.,விவனர் கலக்கத்தில் உள்ளதாக, அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்தல் பிரசாரம் மற்றும் கட்சி கூட்டங்களுக்கு வருபவர்களுக்கு, தலா, 200 ரூபாய், அதற்கு வாகனத்தை ஏற்பாடு செய்யும் நிர்வாகிகளுக்கு, தலா, 2,000 ரூபாய், அந்த பகுதிக்கு கோவில்களுக்கு, ஒன்று முதல், மூன்று லட்சம் ரூபாய் வரையும், ஆரத்தி எடுப்பவர்களுக்கு தலா, 100 ரூபாய் என, தி.மு.க., - அ.தி.மு.க., தரப்பில் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த, 10ம் தேதி இரவு, ஓட்டுக்கு தலா, 2,000 ரூபாய் வீதம், 40 கோடி ரூபாய், அ.தி.மு.க., தரப்பிலும், அன்று இரவே, ஓட்டுக்கு, 1,000 ரூபாய் வீதம், 20 கோடி ரூபாய், தி.மு.க., தரப்பிலும் பட்டுவாடா செய்துள்ளனர். மொத்த செலவில், அ.தி.மு.க., தரப்பில், 85 கோடி ரூபாய், தி.மு.க., தரப்பில், 40 கோடி ரூபாய் என, 125 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், 150 கோடி ரூபாய் அளவிற்கு, வாக்காளர்களிடம் சென்றுள்ளதாகவும் பா.ம.க., வேட்பாளர் பாஸ்கர், தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்தார்.

தற்போது, வெளிப்படையாக தேர்தல் ரத்து என்று குறிப்பிடவில்லை என்ற போதும், ஆணையம் வெளியிட்ட, 29 பக்க அறிக்கையில், தேர்தல் அட்டவணை மாற்றி அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

FREE DOWNLOAD