snapdeal

Sunday, January 1, 2017

புத்தாண்டு பிரார்த்தனை முடிந்து திரும்பிய போது சம்பவம்: காதலிக்க மறுத்த பேராசிரியைக்கு கத்தி குத்து 5–ந் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் வாலிபர் வெறிச்செயல்



நித்திரவிளை, 



நித்திரவிளை அருகே வருகிற 5–ந் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், காதலிக்க மறுத்த கல்லூரி பேராசிரியையை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புத்தாண்டு பிரார்த்தனை முடிந்து திரும்பிய போது நடந்த இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–

கல்லூரி பேராசிரியை 


குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி அடிமை. இவரது மகள் அனுகெயின்சி (வயது 25), எம்.எஸ்சி பட்டதாரி. இவர் நெல்லையை அடுத்த செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவரை நித்திரவிளை பூந்தோப்பு காலனியைச் சேர்ந்த பெஜி காஸ்ட்ரோ (27) என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்தார். பெஜி காஸ்ட்ரோ என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்து 2 ஆண்டுகள் படித்தார். அதன்பின்பு படிப்பை நிறுத்திவிட்டு மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த பல ஆண்டுகளாக அனுகெயின்சி செல்லும் இடங்களுக்கெல்லாம் பின் தொடர்ந்து சென்று தனது காதலை வெளிப்படுத்தினார். ஆனால் அனுகெயின்சி அவரை காதலிக்க மறுத்தார்.

போலீசில் புகார்

பெஜி காஸ்ட்ரோவின் தொல்லை அதிகரிக்கவே அவர் மீது அனுகெயின்சி கடந்த 6 மாதத்துக்கு முன்பு நித்திரவிளை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் பெஜி காஸ்ட்ரோவை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகு சிறிது காலம் ஒதுங்கி இருந்த பெஜி காஸ்ட்ரோ, மீண்டும் அனுகெயின்சியை பின் தொடரத் தொடங்கினார். ‘நீ என்னை கண்டிப்பாக காதலிக்க வேண்டும், உன்னை தான் திருமணம் செய்வேன்’ என்று மிரட்டினார். ஆனால் அவரது மிரட்டலுக்கு அடிபணியாமல் அனுகெயின்சி அவரை விட்டு விலகியே சென்றார்.

5–ந் தேதி திருமணம் 


இந்தநிலையில் அனு கெயின்சிக்கும், மற்றொரு வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி வருகிற 5–ந் தேதி அனுகெயின்சிக்கு திருமண நடக்க உள்ளது.

இதையறிந்த பெஜி காஸ்ட்ரோ ஆத்திரம் அடைந்தார். தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது என அவர் முடிவு செய்தார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு அனுகெயின்சி அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு புத்தாண்டு பிரார்த்தனைக்கு செல்வதை அவர் அறிந்தார். இதையடுத்து ஆலயத்தின் அருகே கத்தியுடன் அவர் காத்து நின்றார்.

கத்திக்குத்து

புத்தாண்டு பிரார்த்தனை முடிந்து உறவினர்களுடன் அனுகெயின்சி ஆலயத்தை விட்டு வெளியேறி வீடு திரும்பினார். அப்போது அங்கு நின்ற பெஜி காஸ்ட்ரோ பாய்ந்து சென்ற அனுகெயின்சியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அனுகெயின்சியின் வயிற்றில் பல இடங்களில் ஆழமாக கத்திக்குத்து விழுந்தது. வலி தாங்க முடியாமல் அனுகெயின்சி அலறி துடித்தார். அவருடன் வந்த பெண்கள் சத்தம் போட்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே பெஜி காஸ்ட்ரோ அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அப்போது, சுதாரித்துக் கொண்ட சிலர் பெஜி காஸ்ட்ரோவை துரத்தி பிடித்தனர். அந்த இடத்திலேயே அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

கைது 


பின்னர் அவர் நித்திரவிளை போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

கத்திக்குத்து ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடந்த அனுகெயின்சியை உறவினர்கள் மீட்டு நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

FREE DOWNLOAD