snapdeal

Saturday, December 17, 2016

அதிசய வாகனம்!||Marvel-vehicle

அதிசய வாகனம்!||Marvel-vehicle

றிவியல் ஆர்வத்தை மாணவர்கள் மத்தியில் விதைப்பதற்காகவே, ‘அறிவியல் விழிப்பு ணர்வு வாகனம்’ என்ற அதிசய வாகனத்தை உருவாக்கியிருக்கிறார், பொறியியல் ஆராய்ச்சி மாணவரான முரளி.

நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த முரளி, தான் உருவாக்கியுள்ள புதுமை வாகனம், தனது நோக்கம் உள்ளிட்டவை குறித்துக் கூறியதாவது...

அறிவியல் ஆர்வம்

“நாகை மாவட்டம் கோடியக்கரையை சொந்த ஊராகக் கொண்ட நான், தற்போது தரங்கம்பாடியில் வசித்து வருகிறேன். பி.இ. எந்திரப் பொறியியல், எம்.இ. உற்பத்திப் பொறியியல் பட்டங்கள் பெற்ற நிலையில், தற்போது எரிசக்திப் பொறியியலில் ஆய்வு (பிஎச்.டி) மேற்கொண்டு வருகிறேன்.

எனக்கு சிறுவயது முதலே அறிவியலில் மிகுந்த ஆர்வம். அப்போது பொருளாதாரம் இடம் கொடுக்காத நிலையிலும் என்னால் முடிந்த அளவில் ஆய்வுகளை மேற்கொள்வேன், கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவேன்.

எனவேதான், நான் ஓரளவு நிலைபெற்றதும், நம்மைப் போல அறிவியல் சிந்தனை கொண்ட, ஆனால் எவ்வழியில் செல்ல வேண்டும் என்று தெரியாது திகைக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று உறுதி கொண்டேன். அவ்வாறே உதவிகள் செய்து வருகிறேன், வழிகாட்டி வருகிறேன்.


புதுமை வாகனம்

அந்த வரிசையில்தான் நான், மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் அறிவியல் சார்ந்த சிந்தனை, விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்புதுமை வாகனத்தை உருவாக்கியிருக்கிறேன். சிறிய வேனில் அமைந்துள்ள இதை ஒரு நடமாடும் அறிவியல் அதிசயம் என்றே கூறலாம்.

இவ்வாகனத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும் ராக்கெட் மாதிரிகள், ராக்கெட்டுகள் எவ்வாறு விண்ணில் செலுத்தப்படுகின்றன என்பதைக் காட்டும் விதமாக உள்ளன. மேலும், மேற்பகுதியில் அமைந்துள்ள ஒரு வானியல் சாதனம், காற்றின் வேகம், ஈரப்பதம், மழை பெய்வதற்கான அறிகுறி, பெய்யும் மழையின் அளவு போன்றவற்றைக் கண்டுபிடிக்க உதவும்.

சாலை விபத்துகளைத் தவிர்க்க...

சாலை விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், குறிப்பிட்ட இடங்களில் இவ்வாகனத்தை நிறுத்தி, ‘இது ஆபத்தான வளைவு, கவனமாகச் செல்லவும்’, ‘தலைக்கவசம் அணிவீர்’, ‘சாலையைக் கடக்கும்போது கவனமாகச் செல்லவும்’ என்பது போன்ற எச்சரிக்கைகளை இரு ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபரப்பலாம். இவ்வாறு எச்சரிக்கைக் குரல் ஒலிக்கும்போது, விட்டு விட்டு எரியும் சிவப்பு நிற விளக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாகனத்தில் உள்ள, கண்ணாடியைத் துடைக்கும் ‘வைப்பர் பிளேடு’, மழை பெய்யும்போது தானாக இயங்கி தண்ணீரைத் துடைக்கும். இரவில் எதிரே வாகனம் வரும்போது தானாக ‘லோ பீம்’ எனப்படும் முன்விளக்கு பிரகாசத்தைக் குறைக்கும் தானியங்கி அமைப்பு, எரிவாயுவில் இயங்கும் வாகனங்களில் வாயுக்கசிவு ஏற்பட்டால் கண்டுபிடிக்கும் கருவி ஆகியவையும் உள்ளன. வாகன ஓட்டுநர் தூங்காமல் தடுக்கும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தி தண்ணீர் மோட்டார்

சூரிய ஒளி சக்தியில் தண்ணீரை இறைக்கும் ‘சென்ட்ரிபியூகல் ஹைபிரிட் பம்ப்’ மற்றொரு முக்கியமான சாதனம் ஆகும். சாதாரணமாக, மணிக்கு 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இறைக்கும் அளவுக்கு மோட்டார் அமைப்பதற்கு ரூ. 5 லட்சம் வரை ஆகும். ஆனால் சூரிய ஒளியில் இயங்கும் எங்கள் மோட்டார், ரூ.1 லட்சம் செலவிலேயே இப்பணியைச் செய்யும்.

மேலும் தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் வாயுவை மின்னாற்பகுப்பு முறையில் பிரிக்கும் சாதனமும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பிரிக்கப்பட்ட ஹைட்ரஜனை பயன்படுத்தி வாகனத்தைச் செலுத்த முடியும். அவ்வாறு செலுத்தும்போது, 50 சதவீதம் அளவுக்கு கூடுதலாக ‘மைலேஜ்’ பெறலாம்.

என்ஜினை மாற்றலாம்

பொதுவாக, டீசல் என்ஜின் இயங்கும்போது, நைட்ரஸ் ஆக்சைடு எனப்படும் நச்சு வாயுவை வெளியிடும். நாங்கள் 160 ரூபாயில் உருவாக்கியுள்ள ஒரு சாதனத்தைப் பொருத்திக்கொள்வதன் மூலம், டீசல் என்ஜினை எல்.பி.ஜி. என்ஜினாக மாற்றிக்கொள்ள முடியும். இதன்மூலம், தீங்கான நைட்ரஸ் ஆக்சைடு வெளி யீடும் தடுக்கப்படும். இந்தச் சாதனமும் எங்கள் வாகனத்தில் இடம்பெற்றுள்ளது.

சாதாரணமாக இரவில் ஆட்கள் நடமாட்டம் இருந்தாலும் இல்லா விட்டாலும் தெருவிளக்குகள் எரிந்துகொண்டே இருக்கும்.

நாங்கள் உருவாக்கியுள்ள ஒரு மின்சக்தி சேமிப்பு சாதனம் இவ்வாறு மின்சாரம் வீணாவதைத் தடுக்கும். இச்சாதனம் பொருத்தப்பட்டால், தெருவிளக்குகள் குறைந்த பிரகாசத்தில் எரிந்துகொண்டிருக்கும். ஆட்கள் யாரும் செல்லும்போது மட்டும் பிரகாசமாக ஒளிரும் தெருவிளக்குகள், ஆட்கள் அகன்றதும் மீண்டும் குறைந்த பிரகாசத்துக்குத் திரும்பிவிடும். இதன் மூலம், 10 தெருவிளக்குகளுக்கு ஆகும் மின்சாரம்தான் 100 தெருவிளக்குகளுக்கு ஆகும். இந்தச் சாதனமும் எங்கள் வாகனத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல...

வயர் இல்லாமல் மின்சாரத்தைக் கடத்தும் கருவி, மின்சாரமின்றி இயங்கும் மிக்சி, எங்கள் வாகனத்துக்கு எதிர்ப்புறத்தில் சுமார் 500 மீட்டர் தூரம் வரை நடக்கும் நிகழ்வு களைப் பதிவுசெய்யும் காமிரா ஆகியவையும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதை தேவைக்கேற்ப நாம் விரும்பும் திசையில் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

இப்படி இந்த வாகனத்தில் உள்ள பல்வேறு புதுமை அமைப்புகள், மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் என்று நான் நம்புகிறேன். இப்போதே இந்த வாகனத்தை பள்ளிகளுக்குக் கொண்டு சென்று மாணவர்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கையில் அதை கண்கூடாகக் காண்கிறேன்.

அப்துல் கலாமின் அறிவுரை

மூன்றாண்டுகளுக்கு முன்பு நான், அப்துல் கலாம் ஐயாவை தஞ்சாவூரில் சந்தித்தேன். அவர்தான், அறிவியலில் இளைஞர் களுக்கு வழிகாட்டும்படியும், ஊக்கம் அளிக்கும்படியும் என்னை வலியுறுத்தினார். அந்தவகையில் கலாம்தான் எங்களைச் செலுத்தும் சக்தியாக உள்ளார்.

தரங்கம்பாடியில் ‘ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷன்’ என்ற அமைப்பை நிறுவி, மாணவர்களுக்கு புராஜெக்ட் சம்பந்தமான உதவி களைச் செய்கிறோம், அவர்களின் அறிவியல் சிந்தனைகளுக்கு உருவம் கொடுக்கிறோம். இதுவரை பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு நாங்கள் உதவி செய்திருக்கிறோம், தொடர்ந்தும் உதவி வருகிறோம்.

இந்தப் பணியில் என்னுடன் எனது சகோதரர்கள் பாலசுந்தரம், ஜெயராஜ், சகோதரி மகாலட்சுமி ஆகியோரும் இணைந்திருக்கின்றனர்.

அரசின் உதவி

எங்கள் ரிசர்ச் பவுண்டேஷனுக்கு தேவையான நிலத்தை நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் வழங்கியிருப்பதுடன், இதற்கான கடன் உதவியையும் மாவட்டத் தொழில் மையம் வாயிலாக அளித்திருக்கிறது. நாங்கள் உருவாக்கிய 6 கண்டுபிடிப்புகளுக்கு இதுவரை காப்புரிமை பெறப்பட்டிருக்கிறது.

அங்கீகாரம் அளிப்பவர்கள்

நாங்கள் உருவாக்கும் கண்டுபிடிப்புகளை, டென்மார்க்கைச் சேர்ந்த விஞ்ஞானி கார் குனூட்சன், அமெரிக்க விஞ்ஞானி ரவிக்குமார் கோவிந்தராம், அண்ணாமலைப் பல் கலைக்கழகப் பேராசிரியரும் முதுநிலை விஞ்ஞானியுமான சரவணன், தஞ்சைப் பேராசிரியர் ரவிக்குமார், திருச்சி பேராசிரியர் ஸ்டாலின் ஆகியோர் ஏற்று அங்கீகரித்ததும்தான் நாங்கள் வெற்றி பெற்றதாகக் கருதுகிறோம்.

பள்ளிகள்தோறும் வலம் வரும் எங்கள் வாகனத்தில், சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சத்தியகுமாரி தன்னார்வப் பயிற்சியாளராக அறிவியல் சாதனங்கள் பற்றி எடுத்துக் கூறுகிறார்.

எங்களின் இதுபோன்ற அறிவியல் முன்முயற்சிகளுக்கு தூண்டுகோலாக இருந்தவர், இளைஞர்களின் ஆதர்ச நாயகரான அப்துல் கலாம். எனவே அவருக்காக தரங்கம்பாடியில் ஒரு மணிமண்டபத்தையும், அறிவியல் அருங்காட்சியகத்தையும் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

கலாமின் கனவுப்படி, கிராமப்புற விஞ்ஞானிகளை உருவாக்கும், வளர்க்கும் நோக்கத்துக்காக எங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம்” என்று முடிக்கிறார், இந்த முன்னுதாரண இளைஞர். No comments:

Post a Comment

FREE DOWNLOAD